

புதுடெல்லி,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இதனை வெளியிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாட்டின் அனைத்து மொழி பேசும் மக்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் அதன் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், ''இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் சட்டக் கட்டமைப்பு மட்டுமல்ல; அது நமது தேசத்தின் உயிர்நாடியாகும். தற்போது 22 மொழிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து மொழிகளையும் மதித்து ஊக்குவிப்பது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதுடன், 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற உணர்வையும் பிரதிபலிக்கிறது'' எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ''இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கடந்த 77 ஆண்டுகளில் அதன் பயணம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசியலமைப்பு தினம் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது'' என்றார்.