

பெங்களூரு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. கர்நாடக மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படலாம் என பரவலாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முதன்முறையாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 38 பேர் உள்ளனர். அவர்கள் தங்களுக்கும் மந்திரி சபையில் இடம் தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்நிலையில், கர்நாடக துணை முதல்-மந்திரி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசும்போது, மந்திரி சபையில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். புதிய சிந்தனை வேண்டும். அது கட்சியின் வருங்காலத்திற்கு ஏற்றது என்றார்.
அதனால், புதிய முகங்களுக்கு நான் ஆதரவு தருகிறேன் என கூறினார். கட்சியில், தலைமுறை மாற்றம் என்பது அவசியம் என கூறிய அவர், கட்சியில் பழைய பாதுகாவலர்களே எப்போதும் இருந்து கொண்டிருக்க முடியாது என்றும் கூறினார்.