கேரளா: முன்பணம் செலுத்தி அரசு பஸ்களில் பயணிக்க புதிய திட்டம் - 29-ந் தேதி முதல் அமல்

முன்பணம் செலுத்தி அரசு பஸ்களில் பயணிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் வருகிற 29-ந் தேதி அமலுக்கு வருகிறது.
கேரளா: முன்பணம் செலுத்தி அரசு பஸ்களில் பயணிக்க புதிய திட்டம் - 29-ந் தேதி முதல் அமல்
Published on

கேரளா:

கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ஸ்மார்ட் பயண அட்டைகள் வெளியீடும் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதல்-மந்திரி பினராயி விஜயன் ஸ்மார்ட் பயண அட்டைகளை வெளியிட்டார். இதனை போக்குவரத்துத்துறை மந்திரி ஆண்டனி ராஜு பெற்றுக்கொண்டார். இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

முன்பணம் கட்டி பெறும் ஸ்மார்ட் பயண அட்டைகள் மூலம் கேரள அரசு பஸ்களில் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக திருவனந்தபுரம் நகரில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது. அதன்பின்னர் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். ஆர்.எப்.ஐ.டி. என்ற தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இந்த கார்டுகள் வெளியிடப்படுகிறது. இது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.

இதனால் பயணிகள், போக்குவரத்து ஊழியர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். சில்லறை வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் இருக்காது. அத்துடன் டிக்கெட் வசூலிக்கும் பணத்தை பத்திரமாக வைத்திருந்து ஒப்படைக்கும் கண்டக்டர்களுக்கு சிரமம் ஏற்படாது. ஸ்மார்ட் பயண அட்டைகளை போக்குவரத்து கழக பணிமனைகளில் வாங்கலாம். இந்த திட்டத்தின் தொடக்க விழாவையொட்டி, ரூ.100-க்கு அட்டைகள் வாங்கினால், ரூ.150 வரை பயண டிக்கெட் பெறலாம்.

ரூ.250-க்கு மேல் டிக்கெட்டுகுள் வாங்குவதற்கு, 10 சதவீத தொகை கூடுதலாக வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த அட்டைகளை ஏஜென்சி மூலம் விற்பனை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் ரீசார்ஜ் முறையில் ஸ்மார்ட் அட்டைகளை ரீசார்ஜ் செய்யலாம்.

அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும் தேவைப்படுபவர்களுக்கு அட்டைகளை வழங்கலாம். அதன் மூலம் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதால், பலன் கிடைக்கும். இதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்ட பின்னர், அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். ஓராண்டுக்கு மேல் அட்டைகளை பயன்படுத்தாவிட்டால், செயலிழப்பு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com