குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவலம்

காலை 8 மணி வரை திரும்ப திரும்ப போன் செய்தும் கூட அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை.
குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவலம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் ஆம்லன்சுக்காக 108-க்கு போன் செய்தனர். ஆனால் தற்போது ஆம்புலன்ஸ் இல்லை என பதில் தெரிவிக்கப்பட்டது.

காலை 8 மணி வரை திரும்ப திரும்ப போன் செய்தும் கூட அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை. இதன் காரணமாக குடும்பத்தினர் தனியார் வாகனம் மூலம் கர்ப்பிணியை கோடாலா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். கர்ப்பிணியின் நிலைமை மோசமாக இருந்ததால் டாக்டர்கள் அவரை மோகாடா ஊரக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். ஆனால் அங்கு இருந்தும் கர்ப்பிணியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை.

இந்தநிலையில் மாலை 6 மணியளவில் அவர் மோகாடா ஊரக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது கர்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்ட அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் கூறினர். மேலும் கர்ப்பிணியை அவசர அறுவை சிகிச்சைக்காக நாசிக் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் உயிரிழந்த குழந்தையை வெளியே எடுத்து, பெண்ணின் உயிரை காப்பாற்றினர்.

பின்னர் குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக குழந்தையின் உடலை ஊருக்கு கொண்டு செல்லவும் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் அளவுக்கு அவர்களிடம் பணமும் இல்லை.

இதன் காரணமாக தந்தை சகாராம் காவர் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து 80 கி.மீ. தூரம் அரசு பஸ்சில் பயணம் செய்து ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்தார்.

குழந்தையின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்காத அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com