

நகரி,
தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பீமாரத்தை சேர்ந்தவர் சாம்பையா (வயது 62). இவருக்கு 3 மகன்கள். இவரது இளையமகன் சரத் (வயது 32), கணக்கு பதிவாளராக ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 24-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வீட்டில், மின்விளக்கு அலங்காரம் அப்படியே இருந்தது. நேற்று முன்தினம் திடீரென மழை பெய்ததால் மின் வயர்கள் நனைந்து மின்சாரம் கசிந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சாம்பையாவும், சரத்தும் மாடிக்கு ஏறி சென்றார்கள். எதிர்பாராத வகையில் சாம்பையா அங்கிருந்த மின்சார வயரை தொட்டபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் துடிப்பதை பார்த்த சரத், தந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது சரத் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுதது இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளையும், தந்தையும் இறந்ததால் அந்த குடும்பம் சோகத்தில் மூழ்கியது. தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.