

சென்னை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே மாதம் 23-ந் தேதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முந்தைய விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல என்று எழுத்துபூர்வமான ஆட்சேபனையை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையை 30-ம் தேதிக்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்தது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
தீர்ப்பாயம், ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என கூறியுள்ளது.