ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை


ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை
x
தினத்தந்தி 18 July 2018 11:15 PM GMT (Updated: 18 July 2018 8:58 PM GMT)

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எழுத்துபூர்வமான ஆட்சேபனையை தாக்கல் செய்து உள்ளது.

புதுடெல்லி, 

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இறுதி தீர்ப்பு கூறப்படும் வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ராகேஷ் திவிவேதி, அரசு வக்கீல்கள் யோகேஷ் கன்னா, ராகேஷ் சர்மா ஆகியோர் ஆஜரானார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், பினாகி மிஸ்ரா ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், தங்கள் தரப்பு மனுவை ஏற்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உடனே, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த மனுவை விசாரிப்பதற்கு எதிராக தங்கள் தரப்பில் ஏற்கனவே எழுத்துபூர்வமாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். அத்துடன் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்றும், எழுத்துபூர்வமான தாக்கல் செய்துள்ள வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அர்ஜூனன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்திருப்பதாக அவருடைய வக்கீல் ஷாஜி செல்லன் கூறினார்.

இதனை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தானே நேரில் ஆஜராகி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் தரப்பில் வைகோவின் கோரிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, “மற்றவர்கள் மனு தாக்கல் செய்த போது எதிர்க்காத நீங்கள் வைகோவை மட்டும் எதிர்ப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து வைகோ, “ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 1996-ம் ஆண்டு முதல் போராடி வருகிறேன். 1997-ல் நான் தொடுத்த வழக்கில்தான் சென்னை ஐகோர்ட்டு, ஆலையை மூடுவதற்கான தீர்ப்பை 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி வழங்கியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் தாக்கல் செய்த மேல் முறையீட்டில் அத்தனை அமர்வுகளிலும் நான் பங்கெடுத்து இருக்கிறேன். தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திலும் நான் மனுதாரராக சேர்க்கப்பட்டேன். ஐகோர்ட்டின் மதுரை கிளையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அண்மையில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில்தான் தமிழக அரசு, ஆலையை மூடுவது அரசாங்கத்தின் முடிவு என்று அறிவித்து உள்ளது. எனவே, இந்த விசாரணையில் பங்கேற்க எனக்கு தகுதியும் உரிமையும் உள்ளது” என்றார்.

இதற்கு ஸ்டெர்லைட் ஆலை தரப்பில், “தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்றில் வைகோ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரை தீர்ப்பாயத்தில் மனுதாரராக அனுமதிக்கக் கூடாது” என்று கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், உங்கள் தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுங்கள் என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story