

புதுடெல்லி,
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, டெல்லியில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேசிய தலைநகரில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 27 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும். இதனிடையே டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 290 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா மேலாண்மைக் கொள்கைகளை வகுக்கும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), தேசியத் தலைநகரில் புத்தாண்டுக் கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்பு கொரோனா பரவும் சாத்தியமுள்ள பகுதிகளைக் கண்டறியுமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.