

மும்பை,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் நடந்த ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக வைர வியாபாரி நிரவ் மோடி, கீதாஞ்சலி குழும உரிமையாளர் மெகுல் சோக்ஷி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நிரவ் மோடி, சோக்ஷி ஆகியோரின் வீடு, நிறுவனம், அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏராளமான நகைகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.
இதன் தொடர்ச்சியாக மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நிரவ் மோடியின் 21 அசையா சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. 6 குடியிருப்புகள், 10 அலுவலகங்கள், ஒரு சூரிய ஒளி மின் நிலையம், ஒரு பண்ணை வீடு, 135 ஏக்கர் நிலம் உள்ளிட்டவை அடங்கிய இந்த 21 சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.523.72 கோடி ஆகும்.
இதற்கான இடைக்கால ஆணையை அமலாக்கத்துறை பிறப்பித்து உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்ட மிகப்பெரும் நடவடிக்கை இதுவாகும். இத்துடன் மோடி மற்றும் சோக்ஷியின் ரூ.6,393 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.