மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
Published on

புதுடெல்லி,

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். இதனால், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய இருந்தார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என தொண்டர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.சி. பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்கிறார். முன்னதாக மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பர்த் பவார் பதவியேற்றார். மாநிலங்களவையின் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் அறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை முன்னவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் மூத்த எம்.பி. ஜெயராம் ரமேஷ் ஆகியோரது முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இதுபோல பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ்குமாரும் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக் கொள்கிறார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்பதே தன்னுடைய நீண்டகால விருப்பம் என கூறியிருந்த நிதிஷ் குமார், வளர்ச்சியடைந்த பீகாரை கட்டமைப்பதில் தனக்கு உள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு, புதிய அரசுக்கு தன்னுடைய ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்குவேன் என்றும் கூறி இருந்தார்.

நீண்டகாலத்திற்கு பீகாரில் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் 10-வது முறையாக முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com