21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது: ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும்

21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது என்றும், ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது: ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று இரவு அறிவித்தார். அதைத்தொடர்ந்து, ஊரடங்கின்போது, என்னென்ன சேவைகள் கிடைக்கும், என்னென்ன சேவைகள் கிடைக்காது என்பது பற்றிய விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, பஸ், ரெயில், விமானம் என அனைத்துவகையான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள், மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், வர்த்தக, தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்படும்.

ஆஸ்பத்திரி, நர்சிங் ஹோம்கள், போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், ஏ.டி.எம்.கள் ஆகியவை தொடர்ந்து இயங்கும். ரேஷன் கடைகள் மற்றும் உணவுப்பொருட்கள், மளிகை, பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, மீன், கால்நடைத் தீவனம் ஆகியவை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும்.

வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், டெலிவிஷன் சேனல் அலுவலகங்கள் செயல்படும். சுற்றுலா பயணிகள் மற்றும் ஊரடங்கால் சிக்கித்தவிப்பவர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றுக்கும், மருத்துவ, அவசர பணியாளர்கள், விமான, கப்பல் சிப்பந்திகளுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

ராணுவம், துணை ராணுவப்படைகள், கருவூலம் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் செயல்படலாம். பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சமையல் கியாஸ் நிறுவனங்கள், மின்சார அலுவலகங்கள், ஊர்க்காவல் படை, குடிநீர், துப்புரவு பணி ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அமல்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. இதன்படி, இந்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாவிட்டால், ஓராண்டுவரை சிறைத்தண்டனை கிடைக்க வழி ஏற்படக்கூடும். கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக பொய்யான காரணங்களை கூறுவது, 2 ஆண்டுவரை சிறைத்தண்டனைக்கு வழி வகுக்கும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com