குல்பூஷண் ஜாதவுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றம் இல்லை: பாகிஸ்தான் விளக்கம்

குல்பூஷண் ஜாதவுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றம் இல்லை என்று பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.
குல்பூஷண் ஜாதவுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றம் இல்லை: பாகிஸ்தான் விளக்கம்
Published on

இஸ்லமபாத்,

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை உளவு பார்த்ததாக கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் வைத்து பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, குல்பூஷன் ஜாதவுக்கு எதிரான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை அளித்தது.

இந்த தீர்ப்பால் கடும் அதிருப்தி அடைந்த இந்தியா, குல்பூஷன் ஜாதவ் வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்க அனுமதிக்கவேண்டும் என்று இந்தியா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் டிசம்பர் 25 ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார், இந்திய தூதர அதிகாரி ஆகியோர் சந்திக்க அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து குல்பூஷன் ஜாதவ் மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது. இந்தச் சந்திப்புதான், அவர்களின் கடைசிச் சந்திப்பு என்றும், அதன்பிறகு குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவல்களுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று மறுப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், அந்நாட்டு தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

முற்றிலும் மனிதநேய அடிப்படையிலும், இஸ்லாமிய நெறிகளின் அடிப்படையிலும், குல்பூஷண் ஜாதவ் தனது தாயார் மற்றும் மனைவி ஆகியோரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாதில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில், வரும் 25-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதர் அனுமதிக்கப்படுவார்.

குல்பூஷணுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் அச்சுறுத்தல் எதுவுமில்லை. ஏனெனில், அவரது கருணை மனு இன்னும் நிலுவையில் உள்ளது. குல்பூஷண் ஜாதவின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரை ஊடகத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதுதொடர்பாக, இந்திய அரசின் பதிலுக்கு காத்திருக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com