

பெங்களூரு,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நவம்பர் 7 பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணை கட்ட, எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக, பெங்களூருவில் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“கர்நாடகா அரசு தனது சொந்த நிலத்தில் அணை கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனையை நாங்கள் கடைப்பிடிபோம்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் சட்டத்தை நன்கு அறிந்திருப்பார் என்று நம்புகிறேன். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.
மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கே அதிக பயன் கிடைக்கும். வறட்சி காலங்களில் நீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கமாக இத்திட்டம் செயல்படும். இத்திட்டத்திற்கு கர்நாடாகாவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரவாக உள்ளனர். தற்போது வனத்துறை நிலத்திற்கு பதிலாக வேறு 5,400 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் மோதல் போக்கை கைவிட்டு, இத்திட்டத்திற்காக இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அணை திட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் ஒரு குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ”
இவ்வாறு அவர் கூறினார்.