இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடியாது - சுஷில்குமார் மோடி

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று பா.ஜனதா உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நிதி மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா உறுப்பினர் சுஷில்குமார் மோடி பேசியதாவது:-

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பரவலாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவதை எந்த மாநிலமும் விரும்பவில்லை.

பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மாநிலங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதை விட்டுக்கொடுத்தால், வேறு எந்தவகையில் வருமானம் கிடைக்கும்?

தற்போது, பெட்ரோலிய பொருட்கள் மீது 60 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்றால், மத்திய அரசுக்கு 35 ரூபாயும், அந்தந்த மாநில அரசுக்கு 25 ரூபாயும் கிடைக்கிறது. மத்திய அரசுக்கு கிடைக்கும் 35 ரூபாயிலும் மாநில அரசுகளுக்கு 42 சதவீத தொகை அளிக்கப்படுகிறது.

ஆனால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரிவிகிதமான 28 சதவீதம்தான் விதிக்க முடியும். அதாவது, லிட்டருக்கு 60 ரூபாய்க்கு பதிலாக 14 ரூபாய்தான் வரியாக வசூலிக்க முடியும். இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை எப்படி ஈடு செய்வது?

எனவே, இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பே இல்லை. பெட்ரோலிய பொருட்கள் வரி மூலம் கிடைக்கும் வருவாய், அரசாங்கத்தின் பாக்கெட்டுக்கு செல்வதாக சிலர் சொல்கிறார்கள். அப்படியானால், மின்சாரம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் போன்றவை வழங்க அரசுக்கு எங்கிருந்து பணம் வரும்?

ஜி.எஸ்.டி.யை கப்பர்சிங் வரி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநிலமும் இந்த வரி நடைமுறையை எதிர்க்கவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குத்தான் இதை அமல்படுத்தும் துணிச்சல் இருக்கிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com