தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல - ஆளுநரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் பேட்டி

தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஆளுநரை சந்தித்த பின் சஞ்செய் ராவத் கூறினார்.
தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல - ஆளுநரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் பேட்டி
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனா, முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை.

தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. தற்போது சிவசேனா கட்சி தங்களுக்கு 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் விரைவில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறி வருகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில், மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர்கள் ராம்தாஸ் காதம் மற்றும் சஞ்செய் ராவத் ஆகியோர் சந்தித்து பேசினர். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று முதலில் கூறப்பட்ட போதிலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் ஆலோசித்ததாக சஞ்செய் ராவத், ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.

பேட்டியின் போது சஞ்செய் ராவத் மேலும் கூறுகையில், நாங்கள் எங்கள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச்செல்வோம். அரசு இன்னும் அமைக்கப்படவில்லை என்பதை சொல்லவே நாங்கள் சென்றோம். யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்கள் ஆட்சி அமைப்பார்கள். நான் ஆளுநருக்கு அறிவுரை சொல்ல முடியாது. அவரே முடிவு எடுப்பார் என்றார்.

மராட்டியத்தில் நடப்பு சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 9 ஆம் தேதியோடு முடிகிறது. எனவே, அதற்கு முன்பாக புதிய அரசு பதவியேற்பது கட்டாயம் ஆகும். புதிய அவையால் முதல் மந்திரியை தேர்வு செய்ய முடியவில்லை என்றால், சட்டப்பிரிவு 356- கீழ், ஆளுநர் ஜனாதிபதி ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த முடியும். எனவே 5 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், மராட்டிய அரசியல் சூழல் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com