உடைந்த தண்டவாளத்தில் துணியை கட்டி ரெயிலை இயக்கிய அதிகாரிகள் - பயணிகள் அதிர்ச்சி

மும்பையில் தண்டவாளம் உடைந்த இடத்தில், அதிகாரிகள் துணியை கட்டி ரெயிலை இயக்கிய சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடைந்த தண்டவாளத்தில் துணியை கட்டி ரெயிலை இயக்கிய அதிகாரிகள் - பயணிகள் அதிர்ச்சி
Published on

மும்பை,

மும்பையில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுக வழித்தடம் மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. மாலை துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை ஓரளவு சீராகிக்கொண்டிருந்த வேளையில் மான்கூர்டு- கோவண்டி இடையே திடீரென தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு மின்சார ரெயில்கள் நடுவழியில் நின்றன.

தண்டவாள விரிசல் பற்றி தகவல் அறிந்ததும் மத்திய ரெயில்வே என்ஜினீயர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, தண்டவாளத்தின் ஒரு பகுதி உடைந்து கிடந்தது.

அப்போது, அந்த பகுதியில் 4 மின்சார ரெயில்கள் அடுத்தடுத்து நடுவழியில் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் தான் ரெயில்வே அதிகாரிகளுக்கு தண்டவாளத்தில் துணியை சுற்றி கட்ட வேண்டும் என்ற யோசனை பிறந்து உள்ளது. உடனடியாக தண்டவாளம் உடைந்த பகுதியில் துணியை சுற்றி கட்டி வைத்து, அதன் வழியாக ரெயிலை இயக்குவதற்கு அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதன்படி அந்த 4 ரெயில்களும் எந்த பிரச்சினையும் இன்றி மெதுவாக அந்த வழியாக கடந்து சென்று உள்ளது.

ரெயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் துணியை சுற்றி ரெயிலை இயக்கியது பின்னர் தான் தெரியவந்தது. பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக்கப்பட்ட இந்த சம்பவம் மும்பை ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் பிரதான நேரத்தில் ரெயில்கள் தாமதமாவதை தடுக்கவே இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய ரெயில்வே இதை மறுத்து உள்ளது.

இதுபற்றி மத்திய ரெயில்வேயின் தலைமை செய்தித்தொடர்பாளர் சுனில் உடாஷி கூறுகையில், தண்டவாளம் உடைந்த இடத்தில் அடையாளம் காண்பதற்காக முதலில் அங்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக தண்டவாளத்தில் அது ஒட்டவில்லை. இதையடுத்து, அடையாளத்திற்காக துணி கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து 30 நிமிடங்களில் தண்டவாளத்தின் உடைந்த பகுதி சரி செய்யப்பட்டது. எனவே பயணிகள் பாதுகாப்பில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லை, என்றார்.

இதற்கிடையே தண்டவாளத்தில் துணியை கட்டி ரெயிலை இயக்கிய சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர் சமீர் ஜவேரி வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com