வெள்ளத்தில் தப்பிய பசுவுக்கு உரிமை கொண்டாடிய 5 பேர், கேரளாவில் நடந்த சுவாரஸ்யம்

வெள்ளத்தில் தப்பிய பசுவுக்கு 5 பேர் உரிமை கொண்டாடிய நிலையில், உரிமையாளர் வந்ததும் அனைவரும் தப்பி ஓடிய சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
வெள்ளத்தில் தப்பிய பசுவுக்கு உரிமை கொண்டாடிய 5 பேர், கேரளாவில் நடந்த சுவாரஸ்யம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில், வரலாறு காணாத பேய்மழையில் நிலைகுலைந்த கேரளா, தற்போது இயல்பு நிலையை எட்டி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 8 முதல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, அடித்தும் செல்லப்பட்டன. இதில் எர்ணாகுளம் அருகே வல்கம் பகுதியில் உள்ள மேகடம்பு கிராமத்தில் பாயும் ஆற்று வெள்ளத்தில் இருந்து தப்பித்து ஒரு பசு மாடு வந்து அலைந்து கொண்டிருந்தது.இதைப் பார்த்த அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு அந்த மாட்டைப் பிடித்துச் சென்று கட்டினார். அந்த மாட்டைப் பார்த்த மற்றொருவர் நான்தான் அந்த மாட்டை முதலில் பார்த்தேன், நான் கொண்டு போக நினைத்த போது நீங்கள் கொண்டு வந்துவீட்டீர்கள் என்று அது என்னுடைய மாடு என்று உரிமை கொண்டாடினார்.

இதனால், ஊர்க்கூட்டத்தில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த அப்பகுதி மக்கள், ஊர்க்கூட்டத்தை கூட்டினர். கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, மற்றொரு ஊரைச் சேர்ந்தவர் அங்கு வந்து நான் வீட்டில் கட்டியிருந்த என் பசுமாட்டைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தேன். இங்கு இருக்கிறது என்று கூறி மாட்டை இழுத்துச் செல்ல முயன்றார். இதனால், 3-வது நபர் மாட்டுக்குச் சொந்தம் கொண்டாடினார்.இந்தப் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் போது மேலும் இருவர், இது தன்னுடைய மாடு என உரிமை கொண்டாடினர். இதனால், ஒரு பசுமாட்டுக்கு 5 பேர் உரிமை கொண்டாடுவதைப் பார்த்து கிராமமக்கள் குழப்பத்தில் உறைந்தனர். மாட்டை பிடித்துச் செல்வதில் ஒருவொருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டது. இதனால், அங்குக் குழப்பமும், கூச்சலும் நிலவியது.

இந்நிலையில், அங்கு வந்த உள்ளூர் ஹோமியோபதி மருத்துவர், மாட்டின் காதுப்பகுதியில் காப்பீட்டுக்கான தோடு மாட்டப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார். இதை வைத்து உண்மையான உரிமையாளரைக் கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்தார்.மாட்டின் காதில் இருந்த அந்தத் தோட்டின் எண்ணை வைத்து, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சென்று விசாரித்தனர். அவர்கள் கணினி மூலம் மாட்டின் காப்பீட்டு எண்ணை வைத்து உரிமையாளர் எடக்கரா பகுதியைச் சேர்ந்த பேபி என்பவர் எனக் கண்டுபிடித்தனர். பேபியின் செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மழை வெள்ளத்தில் வீடு அடித்துச் சென்றுவிட்டது, நான் வளர்த்த மாட்டின் குடிலும் அடித்துச் சென்றதால் மாட்டைக் காணவில்லை என்று புலம்பினார். பின்னர் விவரங்களைக் கூறியபின் அவர் மாட்டை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதற்கிடையை பசுமாட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைக் கண்டுபிடித்த விவரம் அறிந்தவுடன், மாட்டுக்கு உரிமை கொண்டாடி நாடகம் ஆடிய 5-பேரும் அப்பகுதியில் இருந்து திடீரென மாயமாகினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com