கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா
Published on

புதுடெல்லி,

கடந்த 1952-ம் ஆண்டு மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. கடந்த 1968-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டன. கடந்த 1970-ம் ஆண்டில் மக்களவை கலைக்கப்பட்டது. இதன்பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதை அடிப்படையாக வைத்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மத்திய சட்டத் துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் நாளை அறிமுகம் செய்கிறார். மக்களவை, சட்டசபை தொடர்பாக ஒரு மசோதாவும், யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக ஒரு மசோதாவும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளன.

இதனிடையே பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை உறுதியாக நிறைவேற்றும் முடிவில் உள்ளது. அதேநேரம் இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனவே இந்த மசோதாக்களை அறிமுக நிலையிலேயே அவை எதிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவையில் பெரும் அமளி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com