கர்நாடாகாவில் செயற்கை பனீருக்கு ஓராண்டு தடை

மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதால் செயற்கை பன்னீர் விற்பனைக்கு ஓராண்டுக்கு தடை விதித்து சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடாகாவில் செயற்கை பனீருக்கு ஓராண்டு தடை
Published on

பெங்களூரு

கர்நாடகத்தில் மக்களின் ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு சுகாதாரத்துறை தடை விதித்து வருகிறது. குறிப்பாக ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக ஓட்டல்களில் சோதனை நடத்தி காலாவதியான இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவை பயன்படுத்தினால், அந்த ஓட்டல் நிர்வாகம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி, காய்கறிகளை உணவு சமைக்க பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், செயற்கை முறையில் பன்னீர் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தது. பால் பொருளான பன்னீரில் அதிக புரத சத்து இருப்பதால், அதனை மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

ஓராண்டுக்கு தடை

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு செயற்கை முறையில் பன்னீரை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து, கர்நாடகத்தில் ஓராண்டுக்கு செயற்கை முறையில் தயார் செய்யப்படும் பன்னீரை விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் சுகாதாரத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 17-ந் தேதியில் இருந்தே இந்த செயற்கை பன்னீர் தயாரித்தல், விற்பனை செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பால் பொருட்கள் இல்லாமல் ரசாயனம், எண்ணெய் உள்ளிட்ட பிற பொருட்களால் செயற்கை பன்னீர் தயார் செய்யப்படுவதால், அதனை சாப்பிடும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கடும் நடவடிக்கை

இதனால் இந்த செயற்கை பன்னீர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையும் மீறி செயற்கை பன்னீர் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பன்னீர் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஇருந்தது.அந்த ஆய்வில் பன்னீரில் எந்த விதமான கலப்படமும் இல்லை என்பது தெரியவந்திருந்தது. ஆனாலும் செயற்கை பன்னீரில் பால் பொருட்கள் இல்லை என்பதால், அதனை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால், செயற்கை பன்னீருக்கு தடை விதித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com