

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இனி புதிய எலக்ட்ரிக் ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியின் ஒட்டுமொத்த காற்று மாசுக்கான முக்கிய காரணமாக வாகன புகை விளங்குவதால், தூய்மையான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டெல்லியில் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இந்த திட்டம் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படாமல், கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.இதன்படி, முதற்கட்டமாக 2027 ஜனவரி முதல் டெல்லிக்குள்ளும், 2-ம் கட்டமாக 2028 ஜனவரி முதல் குருகிராம், பரிதாபாத், காசியாபாத் மற்றும் நொய்டா போன்ற அதிக வாகன நெரிசல் கொண்ட சுற்றுப்புற மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.இறுதியாக, 2029 ஜனவரி 1-ந்தேதி முதல் ஒட்டுமொத்த தேசிய தலைநகர் பகுதி (என்.சி.ஆர்.) முழுவதும் எலக்ட்ரிக் அல்லாத புதிய ஆட்டோக்களின் பதிவு முற்றிலும் தடை செய்யப்பட்டு, 100 சதவீதம் மின்சார ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த மற்றொரு புதிய விதிமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில், முறையான புகைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்பட மாட்டாது.
இதனை துல்லியமாக கண்காணிக்க, பெட்ரோல் பங்குகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாகன நம்பர் பலகைகள் மூலம் ஆன்லைன் வழியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரே எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவை கணிசமாக குறைக்க முடியும் என்றும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.