வீதிக்கு வீதி ரெஸ்டோ பார் திறப்பு: மக்களை மது மயக்கத்திலேயே வைத்துள்ளார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு

என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகள் முடிந்து விட்டது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் தனியார் திருமண மண்டபத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாநில தலைவி நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இரு கட்சிகளும் தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்று கூட இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகள் கேட்டால் படிப்படியாக நிறைவேற்றி வருவதாக கூறி வருகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி படிப்படியாக நிறைவேற்றி வருவது, ரெஸ்டோ பார்களை தான். 1 ரெஸ்டோ பாரை திறப்பதற்கு ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்குகின்றனர். காலையில் விண்ணபித்தால் மாலையில் ரெஸ்டோ பார் திறப்பதற்கு அனுமதி கிடைத்துவிடும். மக்களை மது மயக்கத்திலேயே வைத்துள்ளனர். அப்போது தான் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






