!-- afp header code starts here -->

"ஆபரேஷன் சிந்தூர்" - தாக்குதல் பின்னணியும்.. பெயர் காரணமும்..!


ஆபரேஷன் சிந்தூர் - தாக்குதல் பின்னணியும்.. பெயர் காரணமும்..!
x
தினத்தந்தி 7 May 2025 9:42 AM IST (Updated: 7 May 2025 11:03 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் 'சிந்தூர்' என அழைக்கப்படுகிறது.

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் பெயர் காரணம் என்ன?

திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் 'சிந்தூர்' என அழைக்கப்படும்.

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்' என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள் கண் எதிரில் அவர்கள் கணவன் சுட்டுக்கொல்லப்ட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர். திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு சென்ற இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும் அவர்களில் ஒருவர் ஆவார்.

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பங்கரவாத முகாம் மீதான தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குங்குமச் சிவப்பான திலகம் என பொருள் படும் சிந்தூர் என்ற வார்த்தை, போருக்கு செல்பவர்களுக்கு பெண்கள் வெற்றி திலகமிடுவதை குறிக்கும் என்று கூறப்படுகிறது.

தாக்குதல் பின்னணி

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் 9 தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.

பிரிசிசியன் ஸ்டிரைக் (Precision strike) என்று இதை அழைப்பார்கள். இது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவற்றை குறிக்கும். இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும். அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும். உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எங்கே இருந்து தாக்குதல் நடத்துவது என்று உறுதி செய்யப்படும்.

விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது, தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு திட்டம் உருவாக்கப்படும். இந்த முறை இந்தியாவில் இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன.

இதற்கான திட்டங்களை உறுதி செய்த பிறகு, கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. தாக்குதல் தினமான இன்று 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்திய ராணுவம் இன்றைய தாக்குதலை நடத்தியது.

1 More update

Next Story