குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு வழங்கி உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து, அரசு மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களும் மேல்கோர்ட்டின் அனுமதி பெறாமலேயே மேல்முறையீடு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கடுமையான குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் மேல்முறையீட்டை அரசாங்கமே நடத்துகிறது. அந்த குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மேல்கோர்ட்டின் முன்அனுமதி பெற்றால்தான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியும்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களும், முன்அனுமதி பெறாமலேயே மேல்முறையீடு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் எம்.பி.லோகுர், அப்துல் நாசர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, 2-க்கு 1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, நீதிபதிகள் எம்.பி.லோகுர், அப்துல் நாசர் ஆகியோர் எழுதிய தீர்ப்பு வருமாறு:-

குற்ற வழக்குகளில் மேல் முறையீடு தொடர்பான, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 372-வது பிரிவுக்கு, குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடையும் வகையில்தான் பொருள் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில், அப்பிரிவுக்கு உயிரூட்ட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து, அரசு மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்று ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நாடாளுமன்றம், நீதித்துறை, சிவில் சமூகம் ஆகியவை பாதிக்கப்பட்டவர்கள் மீது அங்கொன்றும், இங்கொன்றுமாகவே கவனம் செலுத்துகின்றன. எனவே, நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ஒரு குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை, இன்னல்கள், குற்றச்செயல் நடந்தவுடனே தொடங்கி விடுகிறது. அவர்கள் முதல் தகவல் அறிக்கையின் நகலை பெறுவது கூட சிரமமாக இருக்கிறது.

அவர்களின் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரிக்க வேண்டும். மேல்முறையீடு செய்வதை உரிமை ஆக்க வேண்டும். இவ்வாறு 2 நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

ஆனால், அதே அமர்வில் உள்ள 3-வது நீதிபதியான தீபக் குப்தா, இந்த தீர்ப்புக்கு உடன்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளையும் புறக்கணிக்க முடியாது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com