

புதுடெல்லி,
புதிய கல்விக்கொள்கையின் ஓராண்டு நிறைவையொட்டி, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உயர் கல்வியை சர்வதேச மயமாக்கும் அகாடமிக் கிரெடிட் வங்கியை தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டு நிறைவடைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை களத்திற்கு கொண்டு வர பலர் கடுமையாக பணியாற்றி உள்ளனர். புதிய கல்வி கொள்கை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம். நாட்டை அடுத்தநிலைக்கு எடுத்து செல்லும்.
நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழுமையான அளவில் தயாராக உள்ளனர். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய முத்திரையை பதிக்க இளைஞர்கள் முன்னேற்ற பாதையில் நகர்கின்றனர். இளைஞர்கள் தங்களுக்கு தேவையான கல்வியை தேர்ந்தெடுக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்றவர்களாகவும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் இருப்பதையே நமது இளைஞர்கள் விரும்புகின்றனர். இதற்கான உத்தரவாதத்தை புதிய கல்விக்கொள்கை அளிப்பதுடன், நமது தேசம் ஆதரவு அளிக்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்குகிறது. .விடுதலைமுன்னர் சிறந்த கல்விக்கு வெளிநாட்டிற்கு சென்றோம். தற்போது, வெளிநாட்டினர்நமது நாட்டிற்கு வருகின்றனர்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நமது இளைஞர்கள் புதிய திசையை காட்டுகின்றனர். தேசத்தை கட்டமைப்பதில் புதிய கல்வி கொள்கை மிகப்பெரிய பங்காற்றுகிறது என்று அவர் தெரிவித்தார்.