அதிக பாரம்... அந்தரத்தில் நடுவழியில் நின்ற ரெயிலால் பரபரப்பு


அதிக பாரம்...  அந்தரத்தில் நடுவழியில் நின்ற ரெயிலால் பரபரப்பு
x

மும்பையில் மோனோ ரெயில் ஒன்று அந்தரத்தில் நடுவழியில் நின்று பயணிகளை ஆபத்தில் சிக்க வைத்தது.

மும்பை,

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை கனமழை காரணமாக மின்சார ரெயில் சேவை, பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பயணிகள் மெட்ரோ, மோனோ ரெயில்களில் படையெடுத்தனர். இதில் ஒரு மோனோ ரெயில் அந்தரத்தில் நடுவழியில் நின்று பயணிகளை ஆபத்தில் சிக்க வைத்தது. ரெயிலின் கண்ணாடிகளை உடைத்து ராட்சத ஏணிகள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர். அதிக பயணிகள் ஏறியதால் இழுவை திறனை இழந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த ஆபத்து நேர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து மோனோ ரெயில் இயக்கத்தை பாதுகாக்க நேற்று சில புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் நேற்று காலை 9.28 மணி அளவில் காட்கேபாபா சவுக் ரெயில் நிலையத்திற்கு சென்ற மோனோ ரெயில் ஆச்சார்யா அத்ரே சவுக் ரெயில் நிலையத்தில் திடீரென 12 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் மோனோ ரெயிலில் கோளாறு ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்த மகா மும்பை மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செய்தி தொடர்பாளர் ஸ்வாதி லோகண்டே, “மோனோ ரெயிலில் எந்த தொழில்நுட்ப கோளாறும் ஏற்படவில்லை. புதிய நடைமுறைகளின்படி மோனோ ரெயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 104 டன் எடையில்தான் பயணிகளை ஏற்றவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக எடை 107 டன்னாக அதிகரித்தது. எனவே எடையை குறைக்க பயணிகளை இறக்குவதற்காக ரெயில் நிறுத்தப்பட்டது. பல பயணிகள் கீழே இறங்க தயக்கம் காட்டியதால், சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story