உரிமையாளர் மாரடைப்பால் மரணம் - உடலை விட்டுப் பிரிய மறுத்த விசுவாச நாய்!

மக்கள் அவரை சூழ்ந்து முதலுதவி செய்தபோதும் சரி, பின்னர் அவரது உடலை ஸ்டிரெச்சரில் வைத்து மலைக்கு கீழே கொண்டு வந்தபோதும் சரி, ஜூலி அவரது உடலை விட்டு பிரியாமல் சோகத்துடன் நின்றது.
உரிமையாளர் மாரடைப்பால் மரணம் - உடலை விட்டுப் பிரிய மறுத்த விசுவாச நாய்!
மலையேற்றத்தின் போது, மாரடைப்பு
Published on: 

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜ்கட் கோட்டையில் மலையேற்றம் சென்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தில், அவரது செல்ல நாய் காட்டிய பாசமும் விசுவாசமும் அங்கிருந்தவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

மலையேற்றம்- நெஞ்சுவலி

மராட்டிய மாநிலம் புனேவின் ஹடப்ஸர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ் சதாசிவ் கண்டல்கர் (வயது 35). இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன் நண்பர்கள் 2 பேர் மற்றும் தனது செல்லப் பிராணியான 'ஜூலி' என்ற நாயுடன் ராஜ்கட் கோட்டைக்கு மலையேற்றம் சென்றார். கோட்டையின் 'பாலி தர்வாசா' நுழைவாயில் பகுதிக்கு அருகே ஏறிக்கொண்டிருந்த போது, ஜிக்னேஷிற்கு திடீரென மயக்கம் மற்றும் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.

நண்பர்கள் -மீட்புக் குழுவினர் முயற்சி

அங்கிருந்த சக மலையேற்ற வீரர்கள், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வுத் துறை ஊழியர்கள் உடனடியாக ஓடிவந்து அவருக்கு முதலுதவியாக சி.பி.ஆர் வழங்கி காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர் எந்தப் பதிலும் அளிக்காததால், ஸ்டிரெச்சரில் வைத்து மலைப்பாதையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டார். பின்னர் வெல்ஹே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிக்னேஷை, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

கண்ணீரை வரவழைத்த நாயின் விசுவாசம்

இந்த ஒட்டுமொத்த மீட்புப் பணியின் போதும், ஜிக்னேஷின் நாய் 'ஜூலி' ஒரு நொடி கூட அவரை விட்டு நகரவில்லை. மக்கள் அவரைச் சூழ்ந்து முதலுதவி செய்தபோதும் சரி, பின்னர் அவரது உடலை ஸ்டிரெச்சரில் வைத்து மலைக்கு கீழே கொண்டு வந்தபோதும் சரி, ஜூலி அவரது உடலின் அருகிலேயே சோகத்துடன் பின்தொடர்ந்து வந்தது.

உரிமையாளர் உயிரிழந்ததை உணர்ந்துகொண்ட அந்த வாயில்லா ஜீவன், மனிதர்களைத் தாண்டிய பாசத்துடன் உடலை விட்டுப் பிரிய மறுத்த நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சங்களை உருக வைத்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com