

புதுடெல்லி,
நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் அறிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண் விருதுகள், 13 பத்மபூஷண் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகள் அறிவிக்கப்பட்டன. பத்ம விபூஷண் விருது. மறைந்த இந்தி நடிகர் தர்மேந்திரா, மறைந்த கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன், கேரளா வைச் சேர்ந்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் உள்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
பத்ம பூஷண் விருது மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன், நடிகர் மம்மூட்டி, பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரைப்பை, குடல் மருத்துவ நிபுணர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டது.
பத்மஸ்ரீ விருது நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா, தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, டாக்டர் எச்.வி.ஹண்டே, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.