சாமி ஊர்வலத்துக்கு கொண்டு வந்த யானை மிதித்து பாகன் உயிரிழப்பு

பாகன் அரவிந்தனை யானை துதிக்கையால் பிடித்து காலுக்கு அடியில் இழுத்துப் போட்டு மிதித்தது.
சாமி ஊர்வலத்துக்கு கொண்டு வந்த யானை மிதித்து பாகன் உயிரிழப்பு
Published on

கோட்டயம்,

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே வைக்கம் டி.வி.புரத்தில் உள்ள ராமசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு சாமி ஊர்வலத்துக்காக நேற்று முன்தினம் இரவு தொட்டைக்காடு குஞ்சு லெட்சுமி என்ற யானை கொண்டு வரப்பட்டது.

ஊர்வலத்துக்காக யானைக்கு நெற்றிப்பட்டம் சூட்டி அலங்கரித்து கொண்டு இருந்தனர். அப்போது யானைக்கு திடீரென மதம் பிடித்தது. அது அங்கும் இங்குமாக ஆவேசமாக ஓடியது. இதைபார்த்து விழாவுக்கு வந்த பக்தர்கள் நாலாபுறமாக சிதறியடித்து ஓடினர். தொடர்ந்து அந்த யானையை முதன்மை பாகன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் சங்கிலியால் அருகில் இருந்த தூணில் கட்டி கொண்டு இருந்தார்.

அப்போது யானையின் பின்னால் உதவி பாகன் அரவிந்தன் (வயது25) நின்று கொண்டிருந்தார். திடீரென அந்த யானை துதிக்கையால் அரவிந்தனை பிடித்து காலுக்கு அடியில் இழுத்துப் போட்டு மிதித்தது. இதில் அரவிந்தன் படுகாயத்துடன் மயக்கம் அடைந்தார். உடனே அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு வைக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வைக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகனை யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com