

ஜம்மு,
பாகிஸ்தான் ராணுவம் இன்று 4-வது நாளாக எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. எல்லையில் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதனையடுத்து எல்லை கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடியால் எல்லையில் மீண்டும் அமைதியின்மை தொடங்கி உள்ளது. இந்திய ராணுவமும் பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயம் அடைந்த ராணுவ வீரர் நேற்று இரவு உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த வியாழன் முதல் பாகிஸ்தான் அடாவடி தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ராஜோரி செக்டாரில் பாவானி, காராலி, செட், நவுப் மற்றும் மெக்ரி பகுதியில் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது என போலீஸ் அதிகாரி இக்பால் சவுதாரி கூறிஉள்ளார். அக்னூர் செக்டாரிலும் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் அடாவடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் கிராம மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுடைய வீடுகள் சேதம் அடைந்து உள்ளது, தீக்கிறையாகி உள்ளது.
கடந்த நான்கு நாட்களாக பாகிஸ்தான் எல்லையில் நடத்திய அடாவடி தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர், மூன்று ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். 40-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். எல்லையில் சூழ்நிலையை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. சந்தேகத்திற்கு இடமாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உள்ளனர். எல்லையில் பதட்டமான நிலையானது அதிகரித்து காணப்படுகிறது.