

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு புகலிடம் கொடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தலிபான், ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையில் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் கொடூரமான அதிபயங்கர தாக்குதலை முன்னெடுத்து வருகிறார்கள். ஏற்கனவே தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற ஆப்கானிஸ்தானின் முயற்சியானது தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி செய்தியாளர்களிடம் பேசுகையில், தலிபான்களை அரசியல் கட்சியாக ஏற்க தயார் எனவும், தேசத்தை காப்பாற்ற அவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் கூறினார். அவருடைய அறிவிப்பிற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என கூறிஉள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப், தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இடையிலான பேச்சுவார்த்தை என்பது இரு அரசியல் கட்சிகள் இடையிலானது போன்றதுதான், பாகிஸ்தான் அதற்கு ஆதரவு அளிக்கும். பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. அண்டைய நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாகிஸ்தான் விரும்புகிறது, ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு ராணுவ நடவடிக்கையானது தீர்வாகாது என கூறிஉள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை என்பதில் அமெரிக்காவிற்கு நாட்டம் இருக்கலாம், அதற்கு முன்னதாக அதனுடைய தென் ஆசியா கொள்கையில் ஸ்திரத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார் கவாஜா ஆசிப்.