

இஸ்லமாபாத்,
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. வியன்னா ஒப்பந்தங்களின் படி இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.