பாகிஸ்தான் தாக்குதல்; காயமடைந்த நபர்களுக்காக நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் ரத்த தானம்


பாகிஸ்தான் தாக்குதல்; காயமடைந்த நபர்களுக்காக நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் ரத்த தானம்
x

ஜம்மு, கத்துவா நகரங்களின் பல பகுதிகளில் மக்கள் தேசிய கொடிகளை ஏந்தி ராணுவம், விமானம் மற்றும் கடற்படையினரை புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர்.

ஜம்மு,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஆயுத படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையிலும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு திரளாக சென்ற இளைஞர்கள் பலர் இன்று ரத்த தானம் அளித்தனர்.

இதற்காக அவர்கள், நீண்ட வரிசையில் நின்றனர். காத்திருந்து, ரத்த தானம் அளித்தனர். இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் குப்தா கூறும்போது, ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால், அதற்கு ரத்த தானம் அளிக்க தயாராக நாங்கள் இருக்கிறோம் என்றார். அவரும் இந்த ரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டார். இளைஞர்கள் பலரும் தாமாக முன்வந்து நாட்டுக்காக பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

இதுபற்றி ரத்த தானம் அளித்த இளைஞர் மொஹித் ஜம்வால் கூறும்போது, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் அளித்து விட்டனர். பாகிஸ்தானிய தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக இதனை நடத்தி வருகின்றனர். தன்னார்வத்துடன் மக்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர் என்றார்.

இதேபோன்று, ஜம்மு மற்றும் கத்துவா நகரின் பல பகுதிகளில் பொதுமக்கள் தேசிய கொடிகளை கையில் ஏந்தியபடி இந்திய ராணுவம், விமான படை மற்றும் கடற்படை ஆகியவற்றை புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர்.

பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலை பாராட்டும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. நம்முடைய படையினருக்காக நாம் பெருமை கொள்கிறோம். அவர்களுடைய தைரியம் மற்றும் செயல்திட்ட நடவடிக்கை ஆகியவற்றிற்காக தேசம் அவர்களை வணங்குகிறது என பேரணியில் தலைமையேற்று சென்ற ராஷ்டீரிய பஜ்ரங் தளத்தின் தலைவர் ராகேஷ் குமார் கூறியுள்ளார்.

ஆயுத படைகளுக்கு ஆதரவளிக்கவும், எல்லை கடந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களை எதிர்கொள்வதற்காக மேற்கொண்ட ஈடுஇணையற்ற செயல்பாட்டிற்காகவும் ஜம்முவின் தெருக்களில் தேசப்பற்றுடன் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

1 More update

Next Story