

புதுடெல்லி,
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் முகாம் அமைத்துள்ள பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இத்தகைய ஊடுருவல்களை இந்திய ராணுவம் முறியடிப்பதில் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.இந்திய ராணுவம் தரப்பில் அவ்வப்போது பதிலடி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அது குறித்து இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
நவ்ஷெரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்றும், ஊடுருவல்களுக்கு பக்கபலமாக பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவ உயர்அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆனால், எல்லை தாண்டி பயங்கரவாத முகாம்களை அழித்ததாக இந்திய ராணுவம் கூறியதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித் இது பற்றி கூறுகையில், பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து இது போன்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தற்பெருமை வேண்டாம். இந்த பிரச்சினையை பொறுத்தவரை இருநாடுகளும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.