

ஸ்ரீநகர்,
பாகிஸ்தானில் நடந்து வரும் இம்ரான்கான் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக 11 அரசியல் கட்சிகள், கைகோர்த்துள்ளன. வருகிற ஜனவரி 31-ந் தேதிக்குள் அவர் பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளன. இதனால், அங்கு அரசியல் குழப்பம் உருவாகும் நிலை காணப்படுகிறது.
இந்தநிலையில், இதில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப எல்லையில் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிக்கும் என்று இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் 15-வது படைப்பிரிவின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு, இந்த தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதன் மூலமோ அல்லது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதன் மூலமோ இதை செய்யக்கூடும். ஆனால், 2 சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது. எந்த அத்துமீறலுக்கும் பதிலடி கொடுக்கும்.
எல்லைகோடு வழியாக ஊடுருவ நல்ல தருணத்தை எதிர்பார்த்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயிற்சி முகாம்களில் 200 முதல் 250 பயங்கரவாதிகள்வரை தயாராக உள்ளனர். தற்போது குளிர்காலம் தொடங்கி இருக்கிறது. இதை பயன்படுத்தி அவர்கள் ஊடுருவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
குறைவான உயரம் கொண்ட பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவலாம். பீர் பஞ்சாலின் தென்பகுதி வழியாகவும் ஊடுருவலாம். எல்லை கோட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறோம். கண்காணிப்பு சாதனங்களின் உதவியுடன் பாதுகாப்பு பணி நடக்கிறது. சமீபத்தில், காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தல் அமைதியாக நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.