

புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பாகிஸ்தான் மந்திரி முசாதிக் மாலிக், தாஜ்மகால் மற்றும் நிஜாமுதீன் தர்காவுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள புரானா கிலா பகுதியில் இன்று முதல் 22-ம் தேதி வரை ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கு இடையேயான கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சுற்றுச்சூழல் துறை மந்திரி முசாதிக் மாலிக் இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் மற்றும் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா ஆகிய இடங்களுக்குச் செல்ல அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால், எஸ்.சி.ஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக மட்டுமே அவருக்கு இந்தியா வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநாட்டைத் தவிர வேறு எந்த இடத்துக்கும் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற எஸ்.சி.ஒ கூட்டத்தில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றார்.
அதன்பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் முதல் பாகிஸ்தான் மத்திய அமைச்சர் முசாதிக் மாலிக் ஆவார். மேலும், கடந்த 2025-ம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.