

புதுடெல்லி,
பாகிஸ்தானின் கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சர்வதேச எல்லை வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துவிட்டார்.
பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தையை ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த திட்டமான கர்தார்பூர் வழித்தட திட்டத்திற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், கர்தார்பூர் வழித்தடம் அமைக்க பாகிஸ்தானின் மேற்கொண்ட நேர்மறையான நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆனால் இது மீண்டும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு இழுக்க வழிவகையாக இருக்காது என கூறியுள்ளார். கர்தார்பூர் வழித்தடம் அமைக்க இந்தியா பல ஆண்டுகளாக கோரிக்கையை விடுத்தது. இப்போதுதான் பாகிஸ்தான் சாதகமான பதிலை கொடுத்துள்ளது. இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று பொருள் கிடையாது. பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது, என்று கூறியுள்ளார்.