மும்மொழி கொள்கை அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற குழு கடிதம்

தென்மாநிலங்களில் இந்தி பேசுவது இல்லை.
மும்மொழி கொள்கை அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற குழு கடிதம்
Published on

புதுடெல்லி,

கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், மூத்த காங்கிரஸ் எம்.பி.யுமான திக்விஜய்சிங், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடப்பு கல்வி ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர் என்னிடம் மனுக்கள் அளித்துள்ளனர். அவற்றை இத்துடன் அனுப்பி வைத்துள்ளேன். அந்த மனுக்களை படித்து பார்த்தபோது, அவை நியாயமானவை, உடனடியாக கவனிக்க வேண்டியவை என்று உணர்ந்து கொண்டேன்.

போதிய ஆசிரியர்களோ, பாடப்புத்தகங்களோ, கால அவகாசமோ இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவிலேயே இக்கொள்கையை திடீரென அமல்படுத்துவது, பலத்த குழப்பத்தை ஏற்படுத்தும்.

என்.சி.இ.ஆர்.டி. மொழி பாடப்புத்தகங்களை வெளியிடும்வரை, தற்போதைய மொழிப்பாடங்களையே பின்பற்ற வேண்டும் என்று பாடத்திட்ட குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைக்கு கடந்த டிசம்பர் மாதம், சி.பி.எஸ்.இ.யின் ஆட்சி மன்றக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், தனது ஆட்சி மன்றக்குழுவின் முடிவை மீறி, ஜூலை 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. என்.சி.இ.ஆர்.டி. இன்னும் மொழி பாடப்புத்தகங்களை வெளியிடவில்லை. எனவே, 6-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை பயன்படுத்துமாறு சி.பி.எஸ்.இ. பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலைமை, தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. தென்மாநிலங்களில் இந்தி பேசுவது இல்லை. வடகிழக்கு மக்களின் பழங்குடியின மொழிகள், சி.பி.எஸ்.இ. அங்கீகரித்த மொழிகள் பட்டியலில் இல்லை. சமஸ்கிருதத்தை பல பள்ளிகள் மூன்றாவது மொழியாக தேர்வு செய்துள்ளன. ஆனால், அதற்கு தகுதியான ஆசிரியர்களோ, பாடப்புத்தகங்களோ இல்லை.

எனவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிலேயே மும்மொழி கொள்கையை அமல்படுத் தும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். அதற்கு தாங்கள் அவசரமாக, கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com