நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது: பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது: பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் புதிய அரசை அமைத்து உள்ளது.

புதிய அரசு கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்ற நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பதவி ஏற்புக்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து மத்திய மந்திரிசபை கூடி விவாதித்தது. அப்போது புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடரின் அலுவல்களும் முடிவு செய்யப்பட்டன.

அத்துடன் மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாரதீய ஜனதா மூத்த எம்.பி. வீரேந்திர குமாரும் நியமிக்கப்பட்டார்.

அதன்படி 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலையில் தேசிய கீதத்துடன் தொடங்கியது. முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காலையில் மக்களவை கூடியதும், விதிமுறைப்படி புதிய உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து சிறிது நேரம் மவுனம் அனுசரித்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் உரையாற்றினார்.

பின்னர் உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது. அவர்களுக்கு வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் முதலில் பதவி ஏற்குமாறு மக்களவையின் தலைவரும், பிரதமருமான மோடிக்கு, அவை செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவா அழைப்பு விடுத்தார். அதன்படி பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக முதலில் பதவி ஏற்றுக்கொண்டார்.

அப்போது பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பாரத் மாதா கீ ஜே, மோடி... மோடி... போன்ற வாழ்த்து கோஷங்களையும் முழங்கினர்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மக்களவையின் தலைமைக்குழு அதிகாரிகளான கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), பத்ருஹரி மக்தாப் (பிஜூ ஜனதா தளம்), பிரிஜ்பூஷண் சரண்சிங் (பா.ஜனதா) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இவர்களை தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் பதவி ஏற்றனர். அவர்களை தொடர்ந்து பிற மந்திரிகளும், எம்.பி.க்களும் பதவி ஏற்றனர்.

காங்கிரஸ் தலைவரும், கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று பிற்பகலில் நாடாளுமன்றத்துக்கு வந்து பதவி ஏற்றார். அப்போது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

வெளியூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று காலையில்தான் ராகுல் காந்தி டெல்லி திரும்பியதால், அவர் காலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மக்களவையில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள் பல்வேறு மொழிகளில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதனால் நாட்டின் பன்மொழி கலாசாரம் நாடாளுமன்றத்தில் சிறப்பாக எதிரொலித்தது.

அதன்படி பிரதமர் மோடி இந்தி மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார். இதைப்போல மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, ஸ்மிரிதி இரானி ஆகியோரும் இந்தியில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பத்ருஹரி மக்தாப் ஒடியா மொழியில் பதவி ஏற்றார்.

இதைப்போல மத்திய மந்திரிகள் ஹர்சவர்தன், ஸ்ரீபாத் நாயக், அஸ்வினி சவுபே மற்றும் டெல்லி எம்.பி. மீனாட்சி லெகி, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மேலும் சதானந்த கவுடா, பிரகலாத் ஜோஷி ஆகிய மந்திரிகள் கன்னடத்திலும், ஹர்சிம்ரத் கவுர் பாதல் பஞ்சாபி மொழியிலும் பதவி ஏற்பு உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் அரவிந்த் சாவந்த், ராவ் சாகிப் பட்டீல் ஆகியோர் மராத்தியிலும், ஜிதேந்திர சிங் டோக்ரி மொழியிலும், பாபுல் சுப்ரியோ ஆங்கிலத்திலும், ராமேஸ்வரி டெலி அசாமி மொழியிலும், தேவஸ்ரீ சவுத்ரி வங்காள மொழியிலும் பதவி ஏற்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லியைச் சேர்ந்த எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் எடுத்தார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளான பாபுல் சுப்ரியோ, தேவஸ்ரீ சவுத்ரி ஆகியோர் பதவி ஏற்ற போது பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை முழங்கி அவர்களை வாழ்த்தினர்.

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வாகன அணிவகுப்பின் போது ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டதற்காக சுமார் 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கோஷத்தை பாரதீய ஜனதா எம்.பி.க்கள் முழங்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியைச் சேர்ந்த 7 எம்.பி.க்களும் நேற்று பதவி ஏற்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் துக்ளகாபாத் தொகுதி எம்.பி.யான ரமேஷ் பிதூரியை பதவி ஏற்க அழைத்தபோது அவர் அவையில் இல்லை. ஆனால் சிறிது நேரத்துக்கு பின் ரமேஷ் பிதூரி அவசர அவசரமாக அவைக்கு வந்தார்.

அப்போது வேறு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டு இருந்தனர். அவைக்கு தாமதமாக வந்ததால் அவருக்கு பிறகு வாய்ப்பு வழங்கப்படும் என அவைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரமேஷ் பிதூரி ஏமாற்றம் அடைந்தார்.

புதிய உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி உள்ளிட்ட மீதம் உள்ள உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்பார்கள்.

தமிழக எம்.பி.க்களும் இன்று பதவி ஏற்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com