

புதுடெல்லி,
டெல்லியில் 60 கி.மீ பயணம் செய்ய கட்டணமாக தனியார் கார் நிறுவனம் ரூ.5,662ஆக வசூலித்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டெல்லியின் மஹிபால்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ஒரு குடும்பத்தினர் யஷோபூமியில் நடைபெறும் ஒருகண்காட்சியில் கலந்து கொள்ள கார் நிறுவனமான ஓலாவில் வண்டியை முன்பதிவு செய்தனர்.
சுமார் 60 கி.மீ பயணம் செய்த அவர்கள் பிற்பகல் சுமார் 3:45மணி நேரம் கண்காட்சியில் செலவிட்டனர். பின்னர், அங்கிருந்து நேரடியாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்தனர்.
அவர்களின் பயணம் முடிந்தபிறகு, ஓலா செயலியில் இருந்த ரசீதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த ரசீதில் அவர்கள் கூடுதலாக 240.5 கி.மீ பயணித்ததாக காட்டப்பட்டது.
சுங்கக்கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் உட்பட, மொத்தக் கட்டணம் ரூ.5,662 ஆக இருந்தது.
இது குறித்து சமூக ஊடகங்களில் இதை அவர்கள் பகிர்ந்தனர். அதில். "நாங் கள் 6 மணி நேரத்திற்கு 60 கி.மீ. பயணத் திட்டத்தை முன்பதிவு செய்தோம். அதற்கான கட்டணம் ரூ. 1,285 மட்டுமே..ஆனால், இறுதியில் கட்டணம் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.5,662 ஆனது. கூடுதலாக 250 கி.மீ. கட்டணம் எப்படி வந்தது என்பது எங்களுக்கு இன்னும் புரியவில்லை” என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த கட்டணம் குறித்து அவர்கள் உடனடி யாக ஓலா வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அது வார இறுதிநாள் என்பதால் தங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினர். எனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.