மும்பையில், பலத்த மழை: அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்; ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்பு

நடுவழியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரெயில் உயர்மட்ட பாதையில் நின்றது.
மும்பை,
நேற்று மும்பையில் பெய்த கனமழை காரணமாக மின்சார ரெயில் சேவை மற்றும் பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பயணிகள் மோனோ ரெயிலில் படையெடுத்தனர். மாலை 6 மணி அளவில் மோனோ ரெயில் பக்தி பார்க் ரெயில் நிலையத்தை கடந்து மைசூர் காலனி நோக்கி சென்று கொண்டு இருந்தது. நடுவழியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரெயில் உயர்மட்ட பாதையில் நின்றது. அதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்தரத்தில் நின்ற ரெயிலுக்குள் இருள் சூழ்ந்தது. மேலும் ஏ.சி.யும் நின்றதால் பயணிகள் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர். தானியங்கி கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோனோ ரெயிலின் ஒரு கதவு மற்றும் 2 ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். அந்த வழியாக ராட்சத ஏணிகளை பயன்படுத்தி பயணிகளை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையே சுமார் 2½ மணி நேரம் போராடி மோனோ ரெயிலில் சிக்கிய 442 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் 14 பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மராட்டியத்தில் நேற்று 2-வது நாளாக மும்பை, பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. குறிப்பாக மும்பையில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ. மழையும், 6 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ. மழையும் பதிவானது.
மும்பை பெருநகரில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு கார்களும் தண்ணீரில் மூழ்கின. மராட்டியத்தில் உள்ள நாந்தெட் மாவட்டத்தில் ஒரு கார் மற்றும் ஆட்டோ மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் ஒரு ஆண் மற்றும் 3 பெண்கள் மாயமானார்கள். பீட் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். கட்சிரோலி மாவட்டத்தில் கால்வாயை கடக்க முயன்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.






