பெகாசஸ் விவகாரம்: சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழு அமைக்க கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த ரிட் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குறிப்பிட்ட மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா அல்லது இல்லையா என்பதை பொது விவாதமாக்க முடியாது, நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விரிவான பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்ய விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யட்டும் என வாதிட்டார்.

மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட விவகாரத்தில் அனைத்து தகவல்களையும் கோர்ட்டுக்கும், மனுதாரர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மத்திய அரசு குழு அமைக்க அனுமதிக்கக்கூடாது. அமைக்கப்படும் குழு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என வாதிட்டார்.

செயல்பாட்டாளர் ஜெகதீப் சொக்கர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், பெகாசஸ் மென்பொருளை வெளிநாட்டு அமைப்புகள் பயன்படுத்தியிருந்தால் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மத்திய அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் எவ்வித தகவலையும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டியதில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சுற்றிவளைத்துப் பேசுவதால் எவ்வித பலனுமில்லை.

இந்த ரிட் மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறோம். இடைக்கால உத்தரவு 2 அல்லது 3 நாட்களுக்குள் பிறப்பிக்கப்படும். அதற்குள் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றும் என்றால் அது குறித்து கோர்ட்டில் முறையிடலாம் என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, இந்தியாவின் ரகசியத்தை காப்பது முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கியம். பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து மக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். சிறப்பு நிபுணர் குழுவின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்று தெரிவித்தனர்.

இதன்படி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ரா பிரிவின் முன்னாள் இயக்குனர் அலோக் ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com