கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை.... நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை - மத்திய சட்டமந்திரி

நீதிபதிகளை நியமிப்பது மத்திய அரசின் வேலை என்று மத்திய சட்டத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை.... நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை - மத்திய சட்டமந்திரி
Published on

காந்திநகர்,

இந்திய நீதித்துறையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் என்பது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவாகும். இந்த குழு சுப்ரீம் கோட்டிற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியமன அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஒப்புதலை ஜனாதிபதி அளிப்பார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வெளியிட்டு வரும் வார பத்திரிக்கையான 'பஞ்சன்யா' சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

1993-ம் ஆண்டு வரை இந்தியாவில் அனைத்து நீதிபதிகளும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி மத்திய சட்ட அமைச்சகம் நியமித்து வந்தது. அந்த நேரத்தில் நாம் மிகச்சிறந்த நீதிபதிகளை கொண்டிருந்தோம்.

இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. நீதிபதிகளை நாட்டின் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அப்படியென்றால் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.

சட்ட அமைச்சகத்துடனான கலந்தாலோசனையை சம்மதமாக (இணக்கம்) 1993-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. நீதிமன்ற நியமனங்களை தவிர மற்ற எந்த துறையிலும் கலந்தாலோசனையை சம்மதமாக (இணக்கம்) வரையறுக்கப்படவில்லை.

கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு ஆன்மாவோடு நாம் செல்லும்போது, நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை.

நீதிபதிகள் தங்கள் சகோதரர்களையே நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவை தவிர உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை.

சட்டமந்திரியாக நான் கவனிக்கும்போது, நீதிபதிகள் பாதி நேரம், மனதில் அடுத்த நீதிபதி யார் என்று முடிவெடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். நீதிபதிகளின் முதன்மை பணி நீதி வழங்குவது, ஆனால், இந்த நடைமுறையால் (கொலிஜியம்) நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகிறது.

நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு முறை தீவிரமாக உள்ளது, இதை கூறுவதற்கு வருந்துகிறேன். ஆனால், அங்கு குழுவாதம் உருவாகுகிறது. தலைவர்கள் மத்தியில் அரசியல் உள்ளதை மக்கள் பார்க்கின்றனர். ஆனால், நீதித்துறையிலும் அரசியல் நடைபெறுகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

மற்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் நடைமுறையில் தலையிடாமல் இருந்தால் நீதிபதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், நீதிபதி நிர்வாக வேலைகளில் தலையிட்டால் அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com