இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவு - பிரியங்கா காந்தி

தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் 13 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து தொகுதிகளிலும் கட்சி வாரியாக பெற்ற வெற்றி விவரங்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி, பீகாரில் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இமாசல பிரதேசத்தில் 2 இடங்களில் காங்கிரசும், பா.ஜனதா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோன்று தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டில் 2 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்த இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 1 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நேர்மறை அரசியலை மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஏழு மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவபூமி இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

100 வருடங்கள் பின்னோக்கி.. 100 வருடங்கள் முன்னோக்கி திசை திருப்பும் அரசியலால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நிகழ்காலத்தை மேம்படுத்தும் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான தெளிவான வரைபடத்தைத் தயாரிக்கும் நேர்மறையான அரசியலை மக்கள் விரும்புகிறார்கள். இளம் இந்தியாவின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று அதில் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com