மத்தியில் வலிமையான அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும் - உத்தரபிரதேசத்தில் மோடி பிரசாரம்

மத்தியில் வலிமையான அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மத்தியில் வலிமையான அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும் - உத்தரபிரதேசத்தில் மோடி பிரசாரம்
Published on

சோன்பத்ரா,

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் பகுதியில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

அப்போது உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாட்டில் எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் கலப்பட கூட்டணி ஆட்சி அமைத்து இருக்கிறதோ, அப்போதெல்லாம் நாட்டின் பாதுகாப்பில் அபாயம் ஏற்பட்டு இருந்தது. இன்றிலிருந்து சரியாக 21 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1998ம் ஆண்டு பொஹ்ரானில் அணுகுண்டு சோதனையை அப்போதைய வாஜ்பாய் அரசு நடத்திக்காட்டியது. வாஜ்பாய் அரசின் துணிச்சலான நடவடிக்கையால்தான், இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் வாஜ்பாய் அரசுக்குப்பின் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பலவீனமான அரசு அமைந்தது. 21-ம் நூற்றாண்டின் முக்கியமான 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடந்தது. இதில் நாட்டின் பாதுகாப்பும், பெருமையும் கழுமரத்தில் ஏற்றப்பட்டது.

எனவே மத்தியில் வலிமையான அரசு அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு வாக்கும் நாட்டை அதற்கு தகுந்த உயரத்துக்கு கொண்டு செல்லும்.

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியை பொறுத்தவரை, மோடியை குறைகூறுவதை தவிர அவர்களிடம் நாட்டுக்காக என்ன கொள்கை இருக்கிறது? ஏழை மக்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களோ, அந்த ஜாதியை சேர்ந்தவன்தான் நானும் என்பதை அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அதனால்தான் ஏழைகளுக்கு வீடு, கியாஸ் சிலிண்டர்கள், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

உத்தரபிரதேசத்தை சீரழித்த சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் இன்று தங்களை காத்துக்கொள்ள கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நாட்டை வலிமையாக்குவதற்கு அவர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது? பயங்கரவாதத்தை அவர்கள் எப்படி கையாளுவார்கள்? இது தொடர்பாக ராகுல், மாயாவதி, அகிலேஷ் யாதவ் என யாரும் உங்களிடம் பேசமாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com