போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - பிரதமர் மோடி

போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - பிரதமர் மோடி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பவனில் முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா கட்சியை நிறுவியவருமான வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று லக்னோவில் உள்ள அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது லக்னோவில் அமையவுள்ள வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் அனைவருக்கும் மருத்துவ வசதி இவைதான் நமது குறிக்கோள் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது;-

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் இது போன்ற சவால்களுக்கு தன்னம்பிக்கையுடன் தீர்வு கண்டுள்ளனர்.

தரமான சாலைகள், போக்குவரத்து மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்டவை நமது உரிமையாகும். அவற்றை பாதுகாப்பது நமது கடமையாகும்.

தரமான கல்வி பெறுவது நமது உரிமையாகும். அந்த கல்வி நிறுவனங்களை பாதுகாப்பதும், ஆசிரியர்களை மதிப்பதும் நமது கடமையாகும்.

பாதுகாப்பான சுற்றுப்புறம் என்பது நமது உரிமையாகும். காவல்துறையினரின் செயல்பாடுகளை மதிப்பது நமது கடமையாகும்.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா? என்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com