கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு அனுமதி; மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

பைக் டாக்சி சேவைகளுக்குத் தடை விதிப்பதைவிட உரிய கட்டுப்பாடுகளை விதித்து முறைப்படுத்துவதே சிறந்தது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்|
 சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on: 

புதுடெல்லி: கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

கர்நாடகாவில் ஓலா, உபேர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையே, உரிய கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் வரை பைக் டாக்சி சேவைகளை நிறுத்த வேண்டும் என்று கடந்த 2025-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து பைக் டாக்சி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இதனை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி 23-ம் தேதி பைக் டாக்சி சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

மாநில அரசுகளுக்கு அதிகாரம்

மேலும், மோட்டார் சைக்கிள்களையும் போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்து, உரிய அனுமதியுடன் ஒப்பந்த அடிப்படையிலான வாடகை வாகனங்களாக இயக்கலாம் என்றும் தெரிவித்தது. அதே நேரத்தில், பைக் டாக்சி சேவைகளுக்கு தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறியது.

மேல் முறையீடு தள்ளுபடி

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பயணிகளின் பாதுகாப்பு, காப்பீடு மற்றும் போதிய பாதுகாப்பு விதிமுறைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களை அரசு முன்வைத்தது.இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, பைக் டாக்சி சேவைகளுக்குத் தடை விதிப்பதைவிட உரிய கட்டுப்பாடுகளை விதித்து முறைப்படுத்துவதே சிறந்தது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகள் உரிய பதிவு மற்றும் அனுமதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்து செயல்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.

X