

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தும் மத்திய அரசின் முடிவு, முற்றிலும் அவசியமான நடவடிக்கையாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் விலை ஏற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையில் மிகப்பெரிய விலை உயர்வு இருந்தபோதிலும், இந்தியாவில் விலை உயர்வு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 20% முதல் 100% வரை உயர்ந்தபோது, இந்தியாவில் பெட்ரோல் 3.2% மற்றும் டீசல் 3.4% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.