

புதுடெல்லி,
பல நாடுகளுடன் இந்தியா போட்டு வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் வருகிற ஆண்டுகளில் மொத்தமாக 85 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார சந்தையை இந்திய சரக்கு மற்றும் சேவைகள் எட்டும் என மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து வருகிறது. இதன் மூலம் வருகிற ஆண்டுகளில் நாட்டின் தொழில்துறை மற்றும் ஏற்றுமதி துறை விரிவடையும் என மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் கூறியதாவது:
2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியா மொத்தமாக 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) கொண்ட நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போட்டிருந்தது.
ஆனால் கடந்த 4½ ஆண்டுகளில் 38 வளர்ந்த நாடுகளை உள்ளடக்கி 9 வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ளது. இந்த நாடுகளின் மொத்த ஜி.டி.பி. 60 டிரில்லியன் டாலர் ஆகும்.
இந்தியா தற்போது மேலும் 8 ஒப்பந்தங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக கனடா, இஸ்ரேல், மெக்சிகோ, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் குழுமம், தென்ஆப்பிரிக்க சுங்க யூனியன், சிலி போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மேலும் 15 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.யை சேர்க்கும். இதன் மூலம் இந்தியா தனது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை சந்தை அணுகலைப் பெறும். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தின் மூலம் 115 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான மொத்த உலக ஜி.டி.பி.யில், 85 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது உலக ஜி.டி.பி.யில் 76 சதவீதம் அளவிலான சந்தையை இந்தியா பெறும்.
இவ்வளவு பெரிய ஒரு சந்தையில், நமது பல்வேறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் அல்லது முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் நமக்கு முன்னுரிமை அணுகல் கிடைக்கும். இதுதான் அதற்கான நேரம்.
எனவே நாம் உலகளாவிய தரத்தை உருவாக்கத் தொடங்குவோம். இதுவே நமது பொன்னான நேரம். நாம் உலகளாவிய அளவில் செல்ல வேண்டும். நாம் உற்பத்தி செய்யும் அனைத்தையும் நுகரும் பிரமாண்டமான உள்நாட்டுச் சந்தையின் வசதியான சூழலிலிருந்து வெளியேறி, உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உருவாக்கி, அவற்றை உயர்தர வடிவமைப்புடன் நேர்த்தியாக ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.