பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தேசிய உணர்வுக்கு அவமானம் ; உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு

பாகிஸ்தானுடனான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.ஆனால் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-பாகிஸ்தானுடனான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும். இது பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த நமது நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமையும். அப்படி செய்யாமல் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட இருப்பது தேசிய உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமானம் ஆகும். நமது ராணுவ வீரர்கள் எல்லையில் தங்கள் உயிரை தியாகம் செய்துகொண்டு இருக்கும் நேரத்தில், நாம் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா?.
மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்திவிட்டதா? பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காயம் இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் தேசபக்தர்கள் இந்த போட்டியை பார்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.ரத்தமும், நீரும் ஒன்றாக பாய முடியாது என்றால், கிரிக்கெட்டும், ரத்தமும் எவ்வாறு ஒன்றாக சேர முடியும்? பா.ஜனதா தேச பக்தியை வைத்து வியாபாரம் செய்கிறது. உத்தவ் சிவசேனா இந்த போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தும். எங்களது கட்சியின் பெண் தொண்டர்கள் “சிந்தூர்”(குங்குமம்) சேகரித்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
பயங்கரவாதம் நிற்காதவரை பாகிஸ்தானுடன் எந்த உறவையும் நாம் வைத்துக்கொள்ள கூடாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பரப்புகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள், இப்போது அதே நாட்டோடு கிரிக்கெட் விளையாடுகிறீர்கள். பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடா, இல்லையா?. அது நமது எதிரியா, இல்லையா?. நமது வீரர்கள் தியாகிகளாகிறார்கள், ஆனால் பாகிஸ்தானுடன் நமது மக்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இது நல்லது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தனது மாதோஸ்ரீ இல்லத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்தத்தை வரவழைத்து நடத்திய சந்திப்பு குறித்த கேள்விக்கு, “பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரும் வரை இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடக்காது என்று எனது தந்தை ஜாவேத் மியான்தத்திடம் உறுதியாக கூறினார்” என்று உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.






