

புதுடெல்லி,
இந்தியா-நேபாளம் இடையே 8 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
முதல் முறையாக அரசுமுறைப் பயணமாக நேபாளப் பிரதமர் பாலன் ஷா இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது எரிசக்தி, பெட்ரோலியக் குழாய் இணைப்பு, விண்வெளி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 8 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு தலைவர்களும் நேபாளத்தில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினர். மேலும், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவிற்கும் நேபாளத்தின் ஜனக்பூர் தாமிற்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணிகள் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி கூறியதாவது;
"இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு என்பது வெறும் அண்டை நாடுகளின் உறவு மட்டுமல்ல, அது ஒரு நெருங்கிய பந்தம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பற்றியது. நாங்கள் ஒருவருக்கொருவர் முன்னேற்றத்தில் பங்காளிகளாகவும், கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருக்கிறோம். மேலும் இன்று, நேபாளத்தின் புனரமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், 24,000 கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி ஒத்துழைப்புத் திட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம்.” என்றார். நேபாளப் பிரதமர் பாலன் ஷா பேசியதாவது;
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவுகள் இமயமலையைப் போல உறுதியாகவும், கடல்களைப் போல பரந்தும் நிற்கின்றன. பிரதமர் மோடியுடனான எனது பேச்சுவார்த்தைகள், பல நூற்றாண்டுகள் பழமையான நேபாள-இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் நவீனமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன. இன்று நாம் எட்டியுள்ள முடிவுகள் நேபாள-இந்திய உறவுகளை புதிய உயரத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.